பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன.பின்பு மிருகவதை தடைச் சட்டத்தில் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்பு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று ஜல்லிகட்டு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையில், தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கை தங்களைப் போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்போடு முறையாகக் கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.