செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூரு காடுகோடி பகுதியை சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூரு உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 4 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
வெங்கடேஷ், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வழக்கறிஞருடன் ஏற்கனவே ஆஜரான நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி நீதிமன்றம் வளாகத்தில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.