தமிழ்நாடு

ஆட்டிப்படைக்கும் அடுத்த வைரஸ்.. குழந்தைகளுக்கு மாஸ்க்கை கட்டாயமாக்கிய மேற்கு வங்க முதல்வர்

ஆட்டிப்படைக்கும் அடுத்த வைரஸ்.. குழந்தைகளுக்கு மாஸ்க்கை கட்டாயமாக்கிய மேற்கு வங்க முதல்வர்

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, குழந்தைகளையெல்லாம் கட்டாயம் மாஸ்க் அணிய சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். மாநிலத்தில் அடினோவைரஸ் பரவுவதையொட்டி, இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, குழந்தைகள் பலரும் சமீபத்தில் இறந்திருந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி, “குழந்தைகள் யாரும் அச்சமடைய வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் போதும். இப்போதும் குழந்தைகள் யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரியவந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகவும். தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியவும். சமீபத்தில் அடினோவைரஸ் காரணமாக இறந்த 19 குழந்தைகளில் 13 பேருக்கு இணைநோய்கள் இருந்திருக்கிறது. ஆகவே இணைநோய்கள் உள்ளவர்கள் கவனத்தோடு இருக்கவேண்டும். அப்படியான குழந்தைகளின் பெற்றோர் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்” என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவல்களின்படி, அடினோவைரஸ்கள் என்பது, ஒரு வகையான வைரஸ். இது உடலில், குறிப்பாக சுவாசக் குழாயில் லேசானது முதல் கடுமையான நோய்களை ஏற்படுத்தும். இந்த வைரஸ் எந்த வயதினரையும் பாதிக்கலாம், இருப்பினும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளிடையே அதிகம் காணப்படுகின்றன. அடினோவைரஸ்கள் லேசானது முதல் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியது.

இதன் கடுமையான அறிகுறிகளாக சளி - இருமல், காய்ச்சல், தொண்டை புண், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, இளஞ்சிவப்பு நிறத்தில் கண்கள் மாறுவது மற்றும் கடுமையான இரைப்பை குடல் அழற்சி ஆகியவை இருக்கின்றன. நோய் தீவிரமாகும்போது நிமோனியா மற்றும் குரல்வளை-வெண்படல காய்ச்சல் (pharyngeal-conjunctival fever) போன்றவை ஏற்படுலாம். நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள குழந்தைகள் அல்லது சுவாசம் அல்லது ஏற்கெனவே இதய பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு, அடினோவைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தற்போதைய சூழலில், மேற்கு வங்காளத்தில் உள்ள பல மருத்துவமனைகளின் குழந்தை மருத்துவ சிகிச்சை பிரிவுகள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன, அவர்களில் பெரும்பாலோருக்கு அடினோவைரஸால் உறுதிசெய்யப்படுகிறது. இதைத்தொடந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுகாதாரத் துறை மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி விழிப்புடன் இருக்கவும், அடினோவைரஸால் பாதிக்கப்பட்டோரை கவனமாக கையாளவும், நோயை தடுக்க தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் தயாராக இருக்கவும் அம்மாநில அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.