தமிழ்நாடு

வலுக்கும் சர்ச்சை: ஆளுநர் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து!

webteam

சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைப்பது போன்ற தொலைபேசி பேச்சுகள் வெளியாகின. இதில் அந்த பேராசிரியை ஆளுநரை பற்றி குறிப்பிட்டது சர்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து நிர்மலாவை தாம் சந்தித்தது கூட இல்லை என ஆளுநர் விளக்கமளித்திருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டியதும் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அந்த பத்திரிகையாளரிடம் ஆளுநர் மன்னிப்பு கோரினார். இப்படி சர்ச்சைகள் உருவெடுத்துள்ள நிலையில் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. ஆளுநர் தன்னைச் சார்ந்த சர்ச்சைகள் குறித்து இப்பயணத்தின்போது விளக்கம் அளிப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.