தமிழ்நாடு

“அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்”- கோவை மாநகராட்சியை குறிப்பிட்டு பேனர் வைத்த குடும்பம்

“அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்”- கோவை மாநகராட்சியை குறிப்பிட்டு பேனர் வைத்த குடும்பம்

webteam

எனது குடும்பத்தினரை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள் எனக் கூறி கோவை மாநகராட்சியை குறிப்பிட்டு விநோத பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கோவை ஹோப் காலேஜ் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் தந்தை, கடந்த 25 ஆம் தேதி கொரோனா காரணமாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 4 பேருக்கு கொரோனா உறுதியானதாகக் கூறி, அந்த நபரின் வீட்டின் முன்பு மாநகராட்சி சார்பில் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என பேனர் வைக்கப்பட்டது.

இதனிடையே, அந்த வீட்டினர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டதில், தொற்று இல்லை என சான்று வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கோவை மாநகராட்சியை கண்டித்து விநோத விளம்பரம் வைத்துள்ளனர். இதில் கொரோனா இல்லாத 4 பேருக்கு இருப்பதாக கூறி அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள் என்ற வாசகங்கள் உள்ளன. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு, 4 - 5 நாள்கள் கழித்து மறுபரிசோதனை செய்கையில் தொற்று இல்லை என்று வருவது இயல்பானதுதான் எனத் தெரிவித்தார். இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவர் கூறினார்.