சேலத்தில் கடனுக்கான தவணை தொகையை செலுத்தாத வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுக்கும் வங்கி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா முழு முடக்கத்தால் பலர் வேலையிழந்துள்ள நிலையில் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்த வற்புறுத்தி தனியார் வங்கி ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கடன் தொகையை வசூல் செய்ய வந்த தனியார் வங்கி ஊழியர்கள் இருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு, பணத்தை கொடுத்தால்தான் வெளியே செல்வோம் எனக் கூறி மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வங்கி நிறுவன மேலாளரிடம் கேட்டபோது, கடன் வசூல் செய்யக்கூடாது என எந்தவித அறிவிப்பும் வழங்கவில்லை என கூறினர். வங்கி ஊழியர்களின் வற்புறுத்தலால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள பலர், கடன் தவணையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.