புவிவெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பங்களாதேஷை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷை சேர்ந்த 29 வயது இளைஞர் முகம்மது ஜாகிருல் இஸ்லாம். இவர் புவியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ளார். புவிவெப்பமாயதல் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தனது சைக்கிள் பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ம் தேதி பங்களாதேஷில் தொடங்கினார். இந்தியாவில் மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று வந்த நிலையில் இன்று மதுரை வந்துள்ளார்.
தனது சைக்கிள் பயணத்தின் மூலம் புவி வெப்பமயமாதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள், அமைச்சர்கள் என அனைவரையும் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்
சைக்கிள் பயணம் குறித்து பேசிய முகம்மது “எனது நாடான பங்களாதேஷில் அடிக்கடி இயற்கை பேரிடர்கள், பெருவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறப்பதை கண்டேன். புவி வெப்பமயமாதலால் தான் இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்கிறது என தெரிந்து கொண்டேன். புவிவெப்பமயமாதலை தடுக்க வேண்டும். அதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளேன்” எனத் தெரிவிக்கிறார்