திண்டிவனம் அருகே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனராக இருந்தவர், பங்காரு அடிகளார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மாரடைப்பு காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
மேல்மருவத்தூரில், அடிகளார் தெருவில் உள்ள வீட்டில் பங்காரு அடிகளாரின் உடல் இன்று வைக்கப்பட்டிருந்த போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்டோருடன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு, ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் உள்ள மைய மண்டபத்தில் வைக்கப்பட்டது. அப்போது திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று மாலை அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்களும் எம்.பி.க்களும் கலந்துகொண்டு பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின் எந்த இடத்தில் பங்காரு அடிகளார் தனது ஆன்மீகப் பணிகளைத் தொடங்கினாரோ அந்த இடத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.