PM Modi pt desk
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் மனம் கவர்ந்த பாமா, பொம்மி யானைகள்: காரணம் என்ன? சுவாரஸ்ய தகவல்

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பாமா மற்றும் பொம்மி ஆகிய வளர்ப்பு யானைகளை தொட்டு விளையாடி மகிழ்ந்தார்.

PT WEB

பிரதமர் மோடி நேற்று தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்து அங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளை பார்வையிட்டார். தொடர்ந்து முகாமில் பராமரிக்கப்படும் பாமா என்ற யானைக்கே அவர் கரும்புகளை கொடுத்து மகிழ்ந்தார். பாமா யானை பிரதமருக்கு அருகே நெருங்கி வந்த நிலையில், அதனைத் தொட்டு மகிழ்ச்சி அடைந்த பிரதமர் சிறிது நேரம் அதனுடன் விளையாடினார். அத்தோடு முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானையான பொம்மியையும் அவர் தொட்டு விளையாடி மகிழ்ந்தார்.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நிகழ்வில் இந்த இரண்டு யானைகளுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதமர் வருகையின் போது முகாமில் உள்ள வயதில் மூத்த யானை ஒன்றையும், அதேபோல் வயது குறைவான சிறிய யானையையும் அவர் முன்பாக நிறுத்த முடிவெடுத்தோம்.

அதன்படி பாமா யானைக்கு தற்போது 74 வயதாகிறது. முகாமில் உள்ள யானைகளில் இதுதான் அதிக வயதுடைய யானை. அதேபோல பொம்மி யானைக்கு தற்போது 3 வயது ஆகிறது. தற்போது முகாமில் மிக குறைந்த வயதுடைய யானை பொம்மி ஆகும். அத்தோடு பொம்மி யானை The Elephajnt Wisperer ஆவணப்படத்தில் நடித்து பிரபலமடைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தான் இரண்டு யானைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பிரதமர் நிகழ்வில் பங்கேற்க செய்ததாகக் கூறினார்.

அது மட்டுமல்லாமல் பாமா யானைக்கு என சில சிறப்புகள் இருப்பது மற்றொரு காரணமாக அதன் பாகன் மாறன் கூறியிருக்கிறார்... முகாமில் அதிக வயதுடைய யானையாக பாமா உள்ளது. இந்த யானை அனைவரிடமும் எளிதாக பழகக்கூடியது. இதுவரை இந்த யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. எனவே பிரதமரின் பாதுகாப்பை காரணம் காட்டி பாமா யானை தேர்வு செய்யப்பட்டது. பொதுவாக பாமா யானைக்கு கையில் கரும்புகளை வாங்கி பழக்கம் கிடையாது. அதற்கு வாயில் தான் கரும்புகளை ஊட்டி விட வேண்டும். ஆனால் பிரதமர் நிகழ்வில் பாமா யானையின் தும்பிக்கையில், கருப்புகள் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டனர்.

அதற்காக பாமா யானைக்கு தும்பிக்கையில் கரும்பு வாங்குவதற்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் பிரதமர் வருகையின் போது பாமா யானை சிறப்பாக செயல்பட்டது. பிரதமர் வந்த போது பாமா யானை இயல்பாக அதன் தும்பிக்கையை கம்பிகள் மீது வைத்து கொடுத்தது. அதை தான் பிரதமர் நரேந்திர மோடி தொட்டு மகிழ்ந்தார் என பாகன் மாறன் நெகிழ்ச்சியோடு கூறினார்.