Goat market pt desk
தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகம் - எத்தனை கோடிகள் தெரியுமா?

பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

webteam

தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வரந்தோறும் நடைபெறும் சந்தைகளில் குவியும் வியாபாரிகள் ஆடுகளை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வதால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Goat sales

ஓமலூர் மாட்டுச்சந்தை:

ஓமலூர் அருகே இன்று கூடிய மாட்டுச் சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கேரள இஸ்லாமிய வியாபாரிகள், இஸ்லாமிய பெருமக்கள் இறைச்சி மாடுகளை அதிகமாக வாங்கிச் சென்றனர். மேலும், பால் மாடுகள், இளம் கன்றுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வாரச்சந்தை:

மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் ஸ்பெஷல் சந்தையாக நடைபெற்றது. இந்த வாரம் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம் தவிர ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அதிகாலை 4 மணி முதலே விற்பனை களைகட்டியது. 4 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Weekly market

ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை:

ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி வாரச்சந்தை:

கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடு வெள்ளாடு ஆகியவை விற்பனைக்காக குவிந்துள்ளன. 10 கிலோ எடைக்கொண்ட ஆடு 8000 முதல் 12 வரை விற்பனையான நிலையில், அதிகபட்சமாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் ஒரு ஆடு விற்பனையானது. இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தையில் சுமார் ரூ.8 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது.