vijay, BSP pt web
தமிழ்நாடு

“யானை சின்னம்.. தவெக தலைவர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுக்கணும்” - தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ்!

தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியிருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் யானைச் சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தற்போது தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கறிஞர் பிரிவு சார்பில், தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை, இந்தியா முழுவதிலும் நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

நீலக் கொடியும் யானைச் சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக விளங்கி வரக் கூடிய நிலையில், யானைச் சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்டு சின்னமாக இருக்கக்கூடிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்றுள்ளது. யானைச் சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுப் பூர்வமான வரலாறு உள்ளது.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்வினையை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும், அதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையையும் நடிகர் விஜய் எடுக்காமல் உள்ளார். எனவே நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து, தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தின் உருவத்தை அகற்றி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வழி செய்ய வேண்டும்” என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.