கோவையில் தனியார் பள்ளியின் பேட்மிண்டன் பயிற்சியாளர், தன்னிடம் பயிற்சிக்கு வந்த 11ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவியிடம் தனக்கு மோசமான சில புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கேட்டதோடு, ஆபாச வார்த்தைகள் பேசி தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்த காவல்துறை, அவரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக, பேட்மிண்டன் பயிற்சியாளர் பணியாற்றும் பள்ளியில் வேறு ஏதேனும் மாணவிக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை கொடுத்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது மாணவிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வாய்மொழியாக கூறியதாகவும், புகாராக வழங்க நிர்வாகம் மறுப்பதாகவும் தெரிகிறது.
இருப்பினும், போக்சோ பிரிவில் புகார் பெற அவசியமில்லை என்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பதிவை காவல்துறை பெற்றுக்கொண்டதாகவும், அவை குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், காவல்துறையினரின் கைதை தொடர்ந்து, பேட்மிண்டன் பயிற்சியாளர் பள்ளியில் இருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.