செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தேவி (28). திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவரான இவருக்கும், தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் தூத்துக்குடி மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்தோடு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இதற்கிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தேவி, திருமணத்திற்கு பிறகு தன் கணவரோடு கூடுவாஞ்சேரி அருகே வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தேவி ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதால் மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார். ஊருக்கு செல்லும் முன்னால் இவருக்கு கூடுவாஞ்சேரி காவல் துறையினர் சார்பில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
காவலர்கள் சூழ நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் காவலர்கள் சீர் செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் சகோதரி, நாத்தனார் உறவுமுறையில் கைகளில் வளையல் பூட்டி, 7 வகை உணவளித்து சீர் செய்தனர். இவ்விழாவில், கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தம்பதிகளுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காவல் நிலையத்தில் உடன் பணி புரியும் சக காவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.