தமிழ்நாடு

பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு

webteam

பச்சிளம் குழந்தைகளை விற்பனை‌ செய்த வழக்கில் கைதானவர்களில் 7பேரின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பு செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அமுதா கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அமுதாவின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனால் தற்போதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன், அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி ஆகிய 7 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து சிபிசிஐடி போலீசார் 7 பேரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதனைத்தொடர்ந்து நீதிபதி வடிவேல் 7 பேரையும் வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 7 பேரும் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேரும் ஏற்னெனவே ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். இவர்களது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.