Police station pt desk
தமிழ்நாடு

அரியலூர்: டிஎன்ஏ சோதனைக்கு அழைத்த போலீசார் - திடீரென மாயமான பெண் குழந்தை... பின்னணி என்ன?

அரியலூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக குழந்தை கடத்தப்பட்டது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமத்தில் உள்ள இருளர் தெருவைச் சேர்ந்தவர்கள் சித்திரை சோழன் - பரிமளா தம்பதியர். இவர்களுக்கு ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மஞ்சுளாவின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அன்புதுரை என்பவருடன் பழகியதை அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மஞ்சுளா கர்ப்பத்திற்கு காரணம், அதே பகுதியைச் சேர்ந்த அன்புதுரை (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில், அன்புதுரை சிறையில் உள்ள நிலையில், கடந்த மாதம் மார்ச் 29-ஆம் தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், குழந்தையின் அங்க அடையாளங்களை பதிவு செய்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மஞ்சுளா குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது மஞ்சுளாவின் குழந்தையை டி-சர்ட் ஷார்ட்ஸ் அணிந்த மர்ம நபர் ஒருவர் தூக்கியதாகவும், அதை பார்த்ததாகவும் மஞ்சுளா கூறியுள்ளார்.

Police

தனது சகோதரர்தான் குழந்தையை தூக்கியதாக நினைத்த மஞ்சுளா மீண்டும் தூங்கிவிட்டார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மஞ்சுளாவின் தாயார் பரிமளா, குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை எங்கே என்று மஞ்சுளாவிடம் கேட்டபோது, குழந்தை தனது அருகில்தான் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் மஞ்சுளா மற்றும் அவரது தாயார் பரிமளா ஆகியோர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார், குழந்தையை யாரேனும் கடத்திச் சென்றார்களா? குழந்தையை தூக்கிச் சென்றது யார்? தற்போது குழந்தையின் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் ஊர் பகுதிகளில் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். இரண்டு நாட்களாக குழந்தை பசியால் இருக்கும்... பால் கொடுக்கவில்லை... குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை? என தாய் மஞ்சுளா கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

Baby

டிஎன்ஏ பரிசோதனைக்காக திங்கட்கிழமை மஞ்சுளாவையும் மஞ்சுளாவின் குழந்தையையும் அனைத்து மகளிர் போலீசார் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவே குழந்தை காணாமல் போய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாயமான பெண் குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.