திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஆக்சிஸ் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 99,999 பணம் திருடு போயிருப்பதாக, அவர் நேற்றைய தினம் புகார் அளித்திருந்தார்.
இன்று அப்பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பணம் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது?
தயாநிதிமாறன் நேற்று அளித்திருந்த தன் புகாரில், “எனது மனைவி மலேசியாவில் இருக்கிறார். அவருக்கு செல்போனில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து மூன்று முறை அழைப்புகள் வந்துள்ளன. அதில் இந்தியில் பேசிய மர்ம நபர்கள் ஆக்சிஸ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர்.
பின் பணத்தை எடுத்துள்ளனர். வங்கி பரிவர்த்தனையின் போது ஓடிபி நடைமுறை பின்பற்றப்படவில்லை. எங்களுடைய தனிப்பட்ட தரவுகள் டிஜிட்டல் இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை” என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக, சைபர்கிரைம் கிளைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து வரும் நிலையில் தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்ஸிக் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. தயாநிதி மாறனின் ட்விட்டர் பின்னூட்டத்திலேயே இதை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
மேலும் பணம் திரும்பப்பெறப்பட்டது குறித்து, சைபர்கிரைமுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் வங்கித்தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எப்படி இந்த மோசடி நடந்தது என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது.