தமிழ்நாடு

ஆவாஸ் யோஜனா திட்டம்: கடலூரில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என புகார்

ஆவாஸ் யோஜனா திட்டம்: கடலூரில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என புகார்

kaleelrahman

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புகாருடன் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. சரியான பயனாளிகள் பார்த்து தேர்வு செய்யாமல் வசதி படைத்தவர்களுக்கு இந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் கூறும் பெண்கள் கூறும்போது, “ கூலிவேலை செய்து வாடகை வீட்டில் இருக்கும் எங்களை போன்ற பயனாளிகளுக்கு இந்த வீடு ஒதுக்கப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக ஏற்கெனவே பலமுறை முறையாக மனு அளித்துள்ளோம். இந்த வீட்டுக்காக ஏற்கெனவே பலமுறை விண்ணப்பித்து அதற்கான ஆதாரங்களும் வைத்துள்ளோம். ஆனால், ஏழைகளுக்கு ஒதுக்காமல் பணம் படைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் இதில் தலையிட்டு சரியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குவிந்த பெண்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.