ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணத்தை 65 வயது முதியவர் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் கடந்த அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கினறுக்குள் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் மூடாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகள் குறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சிவாஜி (65) என்பவர் தமிழகம் முழுவதும் செல்லும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
90% செவித்திரன் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 25ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் தன் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள 36 மாவட்டங்களுக்கு 5,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது, ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு செய்யவுள்ளார். செல்லும் வழி முழுவதும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறார்.
தற்போது வரை கரூர், புதுச்சேரி, சென்னை, கோவை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் விழிப்புணர்வு செய்துள்ளார். இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.