தமிழ்நாடு

அவிநாசி: தீடீரென தீப்பற்றி எரிந்த வேன்... வீடு திரும்பும்போது நோயாளி உயிரிழப்பு!

அவிநாசி: தீடீரென தீப்பற்றி எரிந்த வேன்... வீடு திரும்பும்போது நோயாளி உயிரிழப்பு!

kaleelrahman

அவிநாசி அருகே திடீரென வேன் தீப்பற்றி எரிந்ததால் அதில் இருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (62). இவர் மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்த ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி (55), உறவினர் நந்தகுமார் (40) ஆகியோர் நேற்றிரவு கோவையிலிருந்து துடுப்பதிக்கு வேனில் அழைத்து சென்றுள்ளனர்.

கோவை - சேலம் ஆறுவழி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பெருமாநல்லூரை அடுத்து பொரசிபாளையம் பிரிவு பகுதியில் வேனை நிறுத்திய நந்தகுமார் மற்றும் ஜோதிமணி இறங்கி சிறுநீர் கழித்துள்ளனர். மீண்டும் வேனுக்கு வந்த நந்தகுமார் காரை ஸ்டார்ட் செய்யும் போது வேனிலிருந்து புகை வந்துள்ளது.

தொடர்ந்து வேன் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. நந்தகுமாரும், ஜோதிமணியும் உடனடியாக இறங்கி ரங்கராஜனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் வேன் முழுவதுமாக தீப்பற்றி எரிய துவங்கியதில், ரங்கராஜன் தீயில் எரிந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

எதிர்பாராதவிதமாக வேன் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் சொல்லப்படும் நிலையில், சந்தேக மரணம் என்னும் அடிப்படையில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.