பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில், 623 காளைகளுடன் 964 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 2 அடுக்கு தடுப்பு வேலிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.