ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம், ராமசாமி உட்பட பலர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க பட்டியலின சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதே போல அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ், விழாக் கமிட்டியினர் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.