செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த லஷ்மி என்பவரும் ஆவடியைச் சேர்ந்த கோமதி என்பவரும், ஆவடியில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மதிய உணவு சாப்பிடுவதற்காக ஆவடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு சாப்பாடு மற்றும் எலுமிச்சை சாதம் பார்சல் வாங்கியுள்ளனர். இதையடுத்து அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் சாப்பிடுவதற்காக அதை தட்டில் போட்டுள்ளனர்.
அப்போது எலுமிச்சை சாதத்தில் உயிருடன் பூரான் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அந்த உணவை எடுத்துக் கொண்டு சம்பந்தபட்ட ஓட்டலுக்கு சென்று கேட்டுள்ளனர். அங்கு உணவகத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் “உயிருடன் எப்படி இருக்கும்?” என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து அப்பெண்கள், பெண் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் உணவில் பூரான் நெளியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தக் காட்சிகளில் வாடிக்கையாளர் உணவை எடுத்து கொண்டு சென்று கடையில் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது. மேலும் “பூரான் இருக்கும் சாதத்தை எப்படி சாப்பிடுவது?” என கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் நாம் கேட்ட போது, “உணவில் இதுபோன்று இருக்க வாய்ப்பில்லை. எங்களுக்கும் இது அதிர்ச்சியாக உள்ளது” என பதில் அளித்தனர். ஆவடியில் நன்கு அறியப்பட்ட உணவகத்தில் வாங்கபட்ட உணவில் உயிருடன் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.