ஆவடியில் கண்டெய்னர் லாரி மின்சார வயரில் உரசி தீப்பிடித்ததில், ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 இருசக்கர வாகனங்கள் நாசமாயின.
மகராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து 36 இருசக்கர வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி ஒன்று, ஆவடியில் உள்ள தனியார் விற்பனை நிலையத்திற்கு விநியோகம் செய்ய வந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம், லட்டூர் பகுதியைச் சேரந்த ஓட்டுநர் சதாம் உசேன் (35) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சிடிஎச் சாலை பகுதியில் வந்தபோது, அங்கிருந்த மின்சார கம்பியின் மீது லாரியின் மேற்பகுதி உரசியுள்ளது.
இதில், தீப்பொறி ஏற்பட்டு லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த ஓட்டுநர் சதாம் உசேன், லாரி நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். லாரி தீப்பற்றி மள மளவென எரிந்ததில், அதன் உள்ளே இருந்த 36 இருசக்கர வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, லாரியில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.
இருந்த போதிலும் லாரியில் இருந்த 36 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. புகார் அடிப்படையில் ஆவடி காவல் ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.