Fire pt desk
தமிழ்நாடு

ஆவடி: திடீரென தீப்பற்றி எரிந்த துணை மின் நிலையம் - மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலமான மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசி, பிரிட்ஜ் போன்ற குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குறைவான மின்னழுத்தம் ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர்கள் பற்றி எரியும் சூழல் ஏற்படுகிறது.

Fire

அப்படி ஆவடி அடுத்த பட்டாபிராம், சேக்காடு பகுதியில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட் ஆம்ப் திறன் கொண்ட உயரழுத்த ட்ரான்ஸ்பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு காரணமாக நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், திரவம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் வானுயர கரும்புகை சூழ்ந்து மளமளவென பற்றி எரிந்த தீயை, அணைக்கும் பணி சவாலாக இருந்ததை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. புகை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் அப்பகுதியில் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுமார் 2மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

MLA Avadi Nazar

இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீ விபத்தைக் காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கக்கன்ஜீ நகர், கோபாலபுரம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நேற்று இரவு இருளில் மூழ்கியது. ஏற்கெனவே தினந்தோறும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அப்பகுதியில் நிலவி வரும் சூழலில், இந்த தீ விபத்து காரணமாக தற்போது பொது மக்களுக்கு மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் அய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர், மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் வழங்கி இப்பகுதி மக்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கிட கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்... சேக்காடு துணை மின் நிலையத்தில் 30,000 மின் நுகர்வோர் இருக்கின்றனர். முதற்கட்டமாக அருகாமையில் இருக்கக்கூடிய துணை மின் நிலையத்திலிருந்து தற்காலிக மின் சேவை வழங்க ஏற்பாடு செய்யப் போகிறோம். பின்னர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து மறுசீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு மீண்டும் மின் சேவை வழங்கிட வழிவகை செய்யப்படும் என்றனர்.

Fire

கோடை காலத்தில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக மின்சாரம் சேவை பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்கு ஆளாகினர்.