Police pt desk
தமிழ்நாடு

ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சந்திக்கும் முதல் தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு முதல் முறையாக வாக்கி டாக்கி ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகளுடன் தயாராகும் ஆவடி மாநகர காவல் ஆணையரகம்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவாகிய ஆவடி மாநகர காவல் ஆணையரகம், முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு தயாராகி வருகின்றது. ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்கள் தலைமையில் சுமார் 3,500 காவல்துறையினர் இதற்காக தயாராகி வருகின்றனர். அதேபோல் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தயார் செய்யும் பணியும் காவல் ஆணையரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடு

இதற்காக 168 மொபைல் வாகனங்களில் தகவல் தொடர்புக்கு வாக்கி டாக்கி வாகனங்கள் இயக்கத்தை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ள மைக் உள்ளிட்ட கருவிகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று காலை 8 மணி முதல் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் ஏற்றப்பட்டு 2054 பூத்துகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் ஆணையரங்கம் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் ஆவடி, அம்பத்தூர், மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர், பூந்தமல்லி, மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் சுமூகமாக தேர்தல் நடைபெற முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.