நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று ஆவடி காவல் ஆணையரகம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலளித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஒற்றை தலைமை சர்ச்சைக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதால் அது பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக ஆவடி ஆணையரக காவல் அதிகாரிகள் ஆலோசித்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் அளித்துள்ள மனுவிற்கு ஆவடி காவல் ஆணையரகம் பதில் அளித்துள்ளது.
அதில், "அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபம் பொது இடமில்லை. தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இதற்கு காவல்துறை அனுமதிப்பதோ, தடை செய்யவோ முடியாது. அதே சமயத்தில், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என உயர்நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து உரிய பாதுகாப்பை வழங்குவோம்" என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.