knife file
தமிழ்நாடு

ஆவடி: மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்

ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கத்தியை சாலையில் தேய்த்தபடி வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர், ஆவடிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை போடும் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான சாலை சுடுகாடு வாசலில் உள்ள சாலையில் தடுப்புகள் அமைத்து, 10 ஊழியர்களுடன் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Road work

அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவ்வழியாக செல்ல வேண்டும் என சையது இப்ராஹிமிடம் கூறியுள்ளனர். அதற்கு பணி நடக்கிறது இந்த வழியாக செல்ல முடியாது என இப்ராஹிம் கூறியதால் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தகராறு முற்றிய நிலையில், அதிலொரு நபர் தனது நண்பர்களை செல்போனில் அழைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நண்பர்கள், கத்தியை தரையில் தேய்த்தபடி ஓடிவந்து சையது இப்ராஹிமை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில், கை மற்றும் காதில் வெட்டுப்பட்டு பலத்த காயமடைந்த இப்ராஹிமை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Police station

இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.