தமிழ்நாடு

ஆவடி: இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் போதே தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆவடி: இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் போதே தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

kaleelrahman

இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் போது ஊழியர் மயங்கி விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல்லா (50). இவர், பட்டாபிராமில் உள்ள இந்திய உணவு கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை முகம்மது அப்துல்லா உணவு கழத்திற்கு பணிக்கு வந்தார். பின்னர், அவர் அங்கு உள்ள கிடங்கில் மூட்டை தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தவர், மூச்சு, பேச்சின்றி கிடந்தார்.

பின்னர், சக ஊழியர்கள் அவரை மீட்டு பட்டாபிராம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முகமது அப்துல்லா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தான், முகம்மது அப்துல்லா இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இறந்த முகமது அப்துல்லாவுக்கு, மனைவி நசீமாபானு மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.