தமிழ்நாடு

ஹெல்மெட் போடவில்லை - ஆட்டோவின் வாகன எண்ணுக்கு வந்த அபராதம்: குழப்பத்தில் ஓட்டுநர்.!

webteam

இரு சக்கரவாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வாகரன். இவர் அப்பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் செல்வாகரன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைகவசம் அணியாமலும், முறையான ஆவணமின்றியும் அதிவேகமாக சென்றதாகக் கூறி காவல்துறையினரின் சார்பில் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தகவலின் அடிப்படையில், அவர் இணையத்தில் தேடியுள்ளார். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், தலைகவசம் அணியாமலும் சென்றதற்காக குலசேகரம் போலீஸார் அவரது ஆட்டோ வாகன எண்ணைக் குறிப்பிட்டு ரூபாய் 1600 அபராதம் விதித்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து செல்வாகரன் கூறும் போது “ கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக ஆட்டோவை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தேன்.

அப்படியிருக்கையில் எனது பகுதியிலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள குலசேகரத்திற்கு நான் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இந்த அபராதத் தொகை எனக்கு பெரிய தொகை. ஆகவே இந்த குளறுபடியை காவல்துறையினர் சரிசெய்ய வேண்டும். இந்தக் கட்டணத்தை நான் செலுத்த போவதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குலசேகர காவல் நிலைய ஆய்வாளர் விமலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன்” என்றார்.