தமிழ்நாடு

இத்தனை சிலைகளின் சான்றுகள் மாயமா ?

இத்தனை சிலைகளின் சான்றுகள் மாயமா ?

webteam

தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 700 சிலைகளின் தொன்மைச் சான்றுகள் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சிலை எதனால் செய்யப்பட்டுள்ளது, அதன் அளவு என்ன? குறிப்பிட்ட சிலை எங்குள்ளது?, அதன் புகைப்படம், சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதே தொன்மைச்சான்று. சிலை திருடப்பட்டால் அதை கண்டறிவதற்கு தொன்மைச் சான்று அவசியம். கோயில்களில் பழமையான சிலைக்கு பதில் போலி சிலையை வைத்தாலோ, திருடுபோன சிலை கண்டறியப்பட்டாலோ அதன் உண்மைத்தன்மையை அறிய பெரிதும் உதவுபவை தொன்மைச் சான்றுகள்தான். 

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளுக்கான தொன்மைச்சான்றை மாநில தொல்லியல்துறை வழங்கிவந்தது. 1974ஆம் ஆண்டு தமிழக தொல்லியல்துறை தொடங்கப்பட்டது முதல் 2014ஆம் ஆண்டு வரை 42 ஆயிரத்துக்கும் அதிகமான புராதனப் பொருட்களுக்கு தமிழக தொல்லியல்துறை தொன்மைச்சான்று வழங்கியுள்ளது‌. இதில் தமிழக இந்துசமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் இருந்த 38 ஆயிரம் சிலைகளும் அடங்கும். குறிப்பிட்ட சிலையின் தொன்மைச்சான்று அது இருக்கும் கோயில், தமிழக தொல்லியல்துறை மற்றும் ஏ.எஸ்.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொல்லியல் ஆய்வகம் ஆகிய 3 இடத்திலும் இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தொன்மைச்சான்று வழங்கும் அதிகாரம் மாநில தொல்லியல்துறையிடம் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது மாநில தொல்லியல்துறை தங்கள் வசமுள்ள தொன்மைச்சான்றுகளை இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒப்படைக்கும் போது 13 ஆயிரத்து 700 சிலைகளின் தொன்மைச்சான்றுகள் மாயமாகிவிட்டது என தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது தான் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. சில கோயில்களில் இருந்த தொன்மைச்சான்றுகளும் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. கடத்தப்பட்ட சிலைகளை அடையாளம் காண சில தமிழக கோயில்கள் குறிப்பிட்ட சிலைகளுக்கான தொன்மைச்சான்றை கேட்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தை அணுகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.