தமிழ்நாடு

ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் : தமிழக அரசு

webteam

ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் அதற்கு பதிலாக மாற்று விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களாக விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்து தான் பெற முடியும்.

இந்நிலையில், ஆகஸ்ட மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், “ஆகஸ்ட் மாத அத்தியாவசிய பொருட்களை பெற வழங்கும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கன்களை 1,3,4 ஆகிய தினங்களில் வீடுதோறும் சென்று ரேஷன்கடை பணியாளர்கள் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும்.

டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்பதை காவல்துறை மூலம் ஒலிப்பெருக்கியில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 5 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் நாட்களில் கடைகள் உரிய நேரத்தில் திறக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் பொருட்கள் வாங்க வழிவகை செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு தக்க பாதுகாப்புடன் நேரில் சென்று பொருட்கள் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.