தமிழ்நாடு

ஆடி அமாவாசை: பக்தர்கள் இன்றி மேல்மலையனூரில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்

ஆடி அமாவாசை: பக்தர்கள் இன்றி மேல்மலையனூரில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்

kaleelrahman

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் இன்றி கோயில் சுற்று பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் மேல்மலையனூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதற்கு பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக இதுவரை பக்தர்கள் பங்கேற்கும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை.

ஆகம விதிகளின்படி கோயிலின் சுற்று பிரகாரத்திலேயே பத்தர்கள் இன்றி கோயில் பூசாரிகளால் ஊஞ்சல் உற்சவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஊஞ்சல் உற்சவ காட்சியை சமூக வலைதளங்கள் மூலமாக பக்தர்கள் பார்த்து அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தங்க கவசம் அணியப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. உற்சவர் அங்காளம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி அளித்தார். அப்போது கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடலை பாடி ஊஞ்சலை ஆட்டுவித்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.