மாணவர் அபிஷேக் - அமைச்சர் அன்பில் மகேஸ் புதியதலைமுறை
தமிழ்நாடு

ஆத்தூர்: பேட்டரி சைக்கிள் வடிவமைத்த அரசுப்பள்ளி மாணவர்... அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு!

ஆத்தூர் அருகே பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்; மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

PT WEB

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரின் மகன் அபிஷேக் (15). இவர் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவரது வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இவர் பயிலும் பள்ளி இருக்கிறது. இக்காரணத்தால், தினமும் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மிதிவண்டியில் செல்ல வேண்டியிருந்துள்ளது அபிஷேக்கிற்கு. இதனால் நேர விரயமாவதால் பள்ளிக்கு காலதாமதமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அபிஷேக். எப்படியாவது இதை சரிசெய்ய வேண்டுமென நினைத்து, பேட்டரி மூலம் தனது சைக்கிளை இயக்கலாம் என முடிவு செய்துள்ளார் அபிஷேக். இதையடுத்து, 30 கிலோ மீட்டர் வேகத்திறன் கொண்ட பேட்டரி மூலம் இயங்கும் மிதிவண்டியை இயக்கி சாதனை படைத்தார் அவர்.

இதை அறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மாணவர் அபிஷேக்கை பாராட்டி "அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக்கின் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்" என பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர் அபிஷேக்கின் இல்லம் தேடிச்சென்று அவரை பாராட்டியுள்ளார். மேலும் அபிஷேக் வீட்டிலிருந்தபடியே அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு தன் அலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து, மாணவருடன் அவரை பேச வைத்தார் கல்வி அலுவலர்.

அப்போது மாணவரிடம் பேசிய அமைச்சர் "உங்களின் கண்டுபிடிப்பை பார்க்கையில், பெருமையாக உள்ளது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ்கின்றீர்கள். உங்களை போன்றோர்தான் நமக்கு தேவை. உங்கள் கண்டுபிடிப்பை கண்டு, முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால்கூட சொல்லுங்கள். பள்ளிக்கு ஏதும் தேவையிருப்பினும் சொல்லுங்கள். நாம் நடைமுறைப்படுத்தலாம்” என தெரிவித்தார்.