காணொளி காட்சி விசாரணையின்போது வழக்கறிஞரின் ஒழுங்கீனமான செயலால் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பித்தபோது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணொளி காட்சி விசாரணை நடந்துவரும் நிலையில், தனி நீதிபதி முன்பான நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் கேமராவை ஆப் செய்யாமல் அருகில் இருந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சிலர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்ததுடன், வீடியோவை சமூக வலைதளங்களிருந்து நீக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் தொழில் செய்ய இடைக்காலத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டு, விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம் என்றும், பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசிக்க தூண்டியதாகவும் நீதிபதி பி.என்.பிரகாஷ் வேதனை தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.