தமிழ்நாடு

கேபி பார்க் குடியிருப்பு விவகாரம்: ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரும் பரந்தாமன்

கேபி பார்க் குடியிருப்பு விவகாரம்: ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரும் பரந்தாமன்

kaleelrahman

புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நடைபெற்றது.

“தொட்டால் சிணுங்கி தாவரத்தை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், தொட்டால் விழக்கூடிய கட்டத்தை முதன் முறையாக தமிழக மக்கள் இப்போதுதான் பார்க்கிறார்கள்” என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

“2018ல் கட்டத் தொடங்கிய கட்டடம் ஓராண்டில் 19 மாடிகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு வேகமாக கட்டியிருக்கக் கூடாது எனவும் ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கடந்த ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார் பரந்தாமன்.

இதற்கு பதிலளித்து பேசிய குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் “கடந்த கால ஆட்சியில் அனைத்து பணிகள் குறித்தும் பரிசீலினை செய்யப்படும், இதில் யார் தவறு செய்திருந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. ஏழை மக்களுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை செய்ய ஐஐடி நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிபுணர் குழு அறிக்கையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரும் இந்த விசயத்தை வேடிக்கை பார்க்கமாட்டார்” என்று பேசினார்.