Mahathi pt desk
தமிழ்நாடு

பழமையான வட்டெழுத்துகளை மீட்டெடுக்கும் பயணம்: செங்கல்பட்டு சிறுமியின் அசாத்திய முயற்சி!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இல்லாமல் போன வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்களை சரளமாக எழுதி படிக்கும் ஒன்பது வயது சிறுமி.

webteam

வட்டெழுத்து என்பது பண்டைக்காலத்திலிருந்து, கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சொற்றொடர்களை சுவடிகளில் எழுத, கல்வெட்டுக்களில் பொறிக்க, பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். தற்போதைய தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்கள் அன்று. வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன.

இதைப் பயன்படுத்துவதிலும் படித்துணர்ந்து கொள்வதிலும் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இவ்வரிவடிவம் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்தது.இந்நிலையில் வட்டெழுத்துகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியில் செங்கல்பட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஈடுபட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள லட்சுமி நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மதுரைவீரன் -கனகா தம்பதியினர். இவர்களுக்கு மகதி மற்றும் ஜியா ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட பேராசிரியரும், வரலாற்று ஆர்வலருமான மதுரைவீரன் கள ஆய்வு மேற்கொள்வது, கள ஆய்வில் கிடைக்கும் பொருட்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவது உள்ளிட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வட்டெழுத்து

இந்நிலையில், மதுரைவீரன் வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்களை படிக்க கற்றுக் கொண்டுள்ளார். அவற்றை சரளமாக எழுத படிக்க கற்றுக்கொள்ள, வீட்டிலும் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது மகள் மகதி மதுரை வீரனிடம் தனக்கும் அவற்றை கற்றுத்தர வேண்டுமென கேட்டு ஆர்வமுடன் கற்றுள்ளார். இதையடுத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களை தற்போது சிறுமி சரளமாக படித்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை அரசுப் பள்ளியில் படிக்கும் மகதி, பண்டைய எழுத்துக்களை சரளமாக படிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.