தமிழ்நாடு

சீட்டாட வரவழைத்து கொள்ளை முயற்சி: 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

சீட்டாட வரவழைத்து கொள்ளை முயற்சி: 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

kaleelrahman

சீட்டாடத்திற்கு வரவழைத்து கொள்ளையடிக்க முயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (22). மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துள்ள இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அருண் சக்ரவர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது,

இந்த நிலையில் அருண் சக்கரவர்த்தி, நிரஞ்சனிடம் அந்தியூர் பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது செங்கல் சூளையில் சீட்டு விளையாட போவதாகவும், அங்கு வருபவர்கள் தலைக்கு ரூ 20 ஆயிரம் பணம் கொண்டு வருவார்கள் என்றும், அவர்களை கத்தி கட்டைகளை கொண்டு மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க போவதாகவும், நீயும் வந்தால் உனக்கும் ஒரு பங்கு தருவதாகவும் கூறியுள்ளார்,

ஆனால் அருண் சக்ரவர்த்தியுடன் செல்லும் பட்சத்தில் பின்னால் வாழ்க்கை போய்விடும் என பயந்து அந்தியூர் காவல் நிலையத்தில் நிரஞ்சன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பணம், ஒரு கார், 5 பைக்குகள், கத்தி மற்றும் உருட்டுக்கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த அருண் சக்கரவர்த்தி, மற்றும் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கவிகாளிதாசன், ஈஸ்வரன், ராமேஸ்வரன், ராஜ்குமார், மற்றும் கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த செல்வம், என தெரியவந்தது,

தொடர்ந்து ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அனைவரையும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.