தமிழ்நாடு

திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

kaleelrahman

தூத்துக்குடி ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4-வது நபராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக இன்று இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி இன்று தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆஜரானார். மேலும் இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பிரமுகர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரில் 3 பேர் மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் இன்று நேரில் ஆஜரானார்கள்.

அதிமுக மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நபர்களும் ஓரே வழக்கிற்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதால் இரு கட்சி பிரமுகர்களும் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.இதில், ஏடிஎஸ்பி கோபி, டவுன் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் இவ்வழக்கில் மேலும் 2 பேர் ஆஜராகாததை தொடர்ந்து வருகின்ற 19-08-2001 அன்று மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.