தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினரை நீக்க முயற்சி - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினரை நீக்க முயற்சி - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

webteam

கரூர் மாவட்டத்தில் திமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வரும் நபர்களின் பெயரை நீக்கம் செய்ய அதிமுக முயற்சித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து திருத்தம் செய்யுமாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டார்.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் திமுகவுக்கு தொடர்ந்து தங்களது வாக்குகளை செலுத்தி வரும் 200 நபர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய அதிமுக முயற்சித்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “ கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்களின் உதவியுடன் திமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வரும் நபர்களின் பெயர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கு சில வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் ஆட்சேபனை தெரிவித்த போது, பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் கரூர் தொகுதிக்கு அருகில் உள்ள தனித்தொகுதியான கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள 10,000 நபர்களை இங்கு சேர்க்கவும் நடவடிக்கை நடந்துள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.