ஆன்லைன் மோசடி கும்பல் pt web
தமிழ்நாடு

சென்னை|நீதிபதியிடமே பணப்பறிக்கும் முயற்சி.. உச்சநீதிமன்ற வாரண்டுடன் வருவதாக மிரட்டல்.. என்ன நடந்தது?

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியிடம் ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று பணப்பறிப்பில் ஈடுபட முயற்சி செய்ததோடு, உச்சநீதிமன்ற வாரண்ட்டுடன் கைது செய்ய வருவதாகவும் மிரட்டியுள்ளது. என்ன நடந்தது?

ஜெ.அன்பரசன்

சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், உயர்நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், திங்கட்கிழமை மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதிபதி சார்பில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 1 ஆம் தேதி நீதிபதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அடையாளம் தெரியாத மர்ம நபர், தான் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் நீதிபதியிடம், தங்களது செல்போன் எண் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்ய உச்ச நீதிமன்றம் கைது வாரண்ட் உடன் வருவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது அந்த கும்பல்.

உடனடியாக ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை தருமாறு கேட்டு மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட முயன்றதாகவும், உடனே நீதிபதி தான் உள்ளூர் காவல் நிலையத்தில் தெரிவித்து விட்டு தருவதாக கூறியதால் சுதாரித்துக் கொண்ட மர்ம கும்பல் இணைப்பை துண்டித்து விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியிடம் பணபறிப்பில் ஈடுபட முயன்ற ஆன்லைன் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தரப்பில் தரப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு - சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FedEx கொரியர் மோசடி, சிம்கார்டு மோசடி என நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி கும்பல் படித்த நபர்களை மட்டும் குறி வைத்து பணப்பறிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 1340 சைபர் மோசடி குற்ற வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 1600 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தங்களது பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வந்துள்ளது எனக் கூறியும் தங்களது சிம்கார்டை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது ஆன்லைன் மோசடி கும்பல். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகளை தவிர்ப்பது முக்கியமாகி இருக்கிறது.