செய்தியாளர் நேசபிரபு புதிய தலைமுறை
தமிழ்நாடு

“சீக்கிரம் வாங்க சார்... என் லைஃப் முடிஞ்சுது...” - கடைசியாக காவல்துறையிடம் உதவிகோரிய செய்தியாளர்

திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

PT WEB

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் நேசபிரபு

மேலாளர் அறையில் இருந்த அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தாக்கினர். பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றது.

இதில் படுகாயம் அடைந்த பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே தன்னை சிலர் பின் தொடர்ந்து வருவதாக காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் புகார் அளித்து வந்துள்ளார்.

செய்தியாளர் நேசபிரபு

ஆனால் காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட காவல்துறையினரிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் பேச்சும் வெளியாகியுள்ளது.

அதில் அவர் “வந்துட்டே இருக்கானுங்க சார்... எவ்ளோ தடவைதான் பாக்றது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்...” என்று கூறுகிறார்.

காவலர் பேசிக்கொண்டிருந்த சில விநாடிகளில், செய்தியாளர் நேசபிரபு, “சார் வந்துட்டானுங்க சார்... 5 கார் வந்திருக்கு சார்... அச்சோ சார்... என் லைஃப் முடிஞ்சுச்சு... அவ்ளோதான்” என அலறுகிறார். இந்த காணொளி, கேட்போரையும் அதிர்ச்சியடைய செய்யும் வகையில் உள்ளது. இதையடுத்து அரசு தரப்பில் உரிய உடனடி நடவடிக்கை தேவையென்ற குரல் வலுவடைந்துள்ளது.