தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்! காரணம் இதுதான்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்! காரணம் இதுதான்!

webteam

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, உடன் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் அபிஷேக் பயிற்சி பணியில் இருந்துள்ளார். அப்பொழுது அவரிடம் ஒரு நோயாளியின் மருத்துவ சிகிச்சை குறித்து உறவினர்கள் கேட்டுள்ளனர். அவர்களிடம் பயிற்சி மருத்துவர் அபிஷேக் விவரித்துள்ளார். அப்போது திடீரென பயிற்சி மருத்துவர் அபிஷேக்கை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்ட அனைவரும் சேர்ந்து பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்த டீன் (பொறுப்பு) ஆயிஷா, பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், ”சிசிடிவி கேமரா அதிகரிக்கப்படும். மருத்துவமனைக்குள் நோயாளியுடன் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் உறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேவையற்ற நபர்கள் இருப்பது தவிர்க்கப்படும். பிரச்சினை உண்டாகும் சூழல் இருந்தால் முன்கூட்டியே போலீஸார் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று மருத்துவமனை டீன் ஆயிஷா உறுதியளித்ததை அடுத்து பயிற்சி மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.