தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் உறவினர் மீது தாக்குதல் ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கே.கே நகர் 2வது செக்டார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் பாரதி. இவர், தனது சகோதரர் சுபாஷ் மற்றும் தாயுடன் அண்ணா நகரில் உள்ள பரதநாட்டிய பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு நேற்றிரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 100அடி சாலை லஷ்மண் சுருதி சிக்னல் சந்திப்பில் வந்தபோது அவ்வழியே மற்றொரு காரில் வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மனைவி மற்றும் பாரதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் சென்று மாறி மாறி புகார் கூறிக் கொண்டே இருந்தனர். அப்போது பாரதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவி இருவரும் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அசோக் நகர் உதவி கமிஷனர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரயும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி போலீசார் முன்னிலையில் பாரதியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது சகோதரியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அவரது மனைவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுபாஷ் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.ஏ.எஸ் அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியும் அசோக் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாரதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரியின் சகோதரர் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.