தமிழ்நாடு

தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?

தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?

webteam

சேலம் மாவட்டம் தலைவாசல் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

‘தமிழர் வேலை தமிழருக்கே’ என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்டனர். இந்த மாநாடு நேற்று இரவு 9.40 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து மாநாட்டிற்கு வந்தவர்கள் தாங்கள் வந்த வாகனத்திலேயே மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இன்றியே அனுப்பப்பட்டன.

அப்போது சேலத்திலிருந்து தலைவாசல் வழியே கடலூருக்கு சென்றிருந்த வாகனத்தில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே வாகனத்தில் இருந்தவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தமிழக வாழ்வுரிமை கட்சியினரே இந்த செயல்களில் ஈடுபட்டதாக சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கள் கட்சியினர் இல்லை. அங்கு வந்தவர்கள் எங்கள் கட்சியினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நானும் விசாரணை நடத்தி வருகிறேன்” என்றார்.