தமிழ்நாடு

ரகசிய எண்ணை சொன்னதால் பறிபோன ரூ28 ஆயிரம் - திருடிய ஏடிஎம் காவலாளி கைது

ரகசிய எண்ணை சொன்னதால் பறிபோன ரூ28 ஆயிரம் - திருடிய ஏடிஎம் காவலாளி கைது

webteam

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வாடிக்கையாளரின் ரகசிய நம்பரை தெரிந்துக்கொண்டு ரூ. 28 ஆயிரம் திருடிய தனியார் வங்கி ஏடிஎம் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அனைத்து வங்களின் ஏ.டி.எம் மையங்கள் இங்கு இயங்கிவருகிறது. 

நெய்குப்பை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி(45), கடந்த 22ம் தேதி பிற்பகல் வைத்தீஸ்வரன்கோயில் தெற்குவீதியில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்க்கு தனது கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். மணிக்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி பாண்டியன் (57) என்பவரிடம் தனது ஏடிஎம் கார்டையும், ரகசிய நம்பரையும் மணி தெரிவித்து ரூ ஆயிரம் பணம் எடுத்து தரக்கூறியுள்ளார். ஏடிஎம் காவலாளி பணத்தை எடுத்துதந்தவுடன் மணி பணத்தை பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டை வாங்க மறந்து சென்றுவிட்டார். 

அதன் பின்னர் அன்றைய தினம் காவலாளி பாண்டியன், ரகசிய நம்பரை வைத்து மணியின் கணக்கிலிருந்து ரூ 28ஆயிரத்தை எடுத்துக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர் மணி வங்கிக்கு சென்று பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் கணக்கில் பணம் இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தனது வங்கி கணக்கின் ஸ்டேட்மெண்ட் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது கணக்கிலிருந்து பணம் திருட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஏடிஎம் காவலாளி பாண்டியனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.