தமிழ்நாடு

"ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்" - முதலமைச்சர் பழனிசாமி 

"ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்" - முதலமைச்சர் பழனிசாமி 

webteam

ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இம்முறை விட்டுவிட்டால் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால் அத்திவரதரை காண லட்சக்கணக்கில் மக்கள் வருகின்றனர். 

இதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். 

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் எனத்தெரிவித்தார்.

மொத்தமுள்ள 48 நாட்களில் 24 நாட்கள் சயன கோலத்திலும் எஞ்சிய 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி தருவார். தற்போது 23 நாள்கள் முடிவடைந்த நிலையில், அத்திவரதர் சிலையின் உறுதி தன்மை குறைவாக இருப்பதாகவும், அதனை சரிசெய்த பின் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.