வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் அவர் காட்சியளிக்கவுள்ளார். இதனால் கூட்டம் அலை மோதுகிறது. இன்று கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அத்துடன் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மக்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் அத்தி வரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். அத்துடன், அத்தி வரதரை மட்டுமே தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.