தமிழ்நாடு

"அந்த காலத்தில் வாகனங்கள் இல்லை, தூக்கி சுமந்தோம்" - பல்லக்கு விவகாரத்தில் சீமான் கருத்து

"அந்த காலத்தில் வாகனங்கள் இல்லை, தூக்கி சுமந்தோம்" - பல்லக்கு விவகாரத்தில் சீமான் கருத்து

Veeramani

பல்லக்கு விவகாரத்தில் மனிதனை மனிதனே சுமப்பது இழிவு, எப்படி பார்த்தாலும் இதனை ஏற்க முடியாது. அன்றைய காலத்தில் வாகனங்கள் இல்லாமல் இருந்தது தூக்கி சுமந்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு, அவரின் 108வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் பல்லக்கு தூக்கும் விவகாரம் குறித்து கேட்டதற்கு, " இது குறித்து என்ன கருத்து சொல்வது என தெரியவில்லை, மனிதனை மனிதனே சுமப்பது இழிவு, எப்படி பார்த்தாலும் இதை ஏற்க முடியாது. அன்றைய காலத்தில் வாகனங்கள் இல்லாமல் இருந்தது தூக்கி சுமந்தோம், இன்றைக்கு தற்போது நவீன வாகனங்கள் வந்துள்ளது. அதுபோல பிரவேசம் என்பதையே நான் ஏற்கவில்லை, எதற்கு மறுபடியும் சமஸ்கிருதத்தை பிடித்து தொங்க வேண்டும், அந்த சிக்கல் தனி. பல்லக்கு தூக்குவதை தவிர்த்து திருவிழா கொண்டாடுவதை நாங்கள் ஏற்கிறோம். மதுரை ஆதீனமும், குன்றக்குடி ஆதீனமும் பல்லக்கில் போகிறார்களா, போவார்களா?" என்றார்

திராவிடர் கழகம் போன்றவர்கள் பல்லக்கு விவகாரத்தை தடை செய்ய வேண்டும் என்று வைக்கும் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், திகவையே ஆரம்பத்திலேயே தடை செய்திருக்க வேண்டும் என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், "நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்கு தனியாக நிதி திரட்டுகிறோம். தமிழக முதல்வரிடம் நான் கேட்பது என்னவென்றால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி உள்ளது, அதை விட மோசமான நெருக்கடி இங்கு உள்ளது அது இன்னும் ஆறு, ஏழு மாதத்தில் தெரியவரும், இப்போ தமிழக அரசு நிதியை இந்திய அரசிடம் கொடுத்து அந்த நிதி இலங்கை தமிழர்களுக்கு சென்று சேருமா? சிங்களர்களுக்கு கொடுக்கிறோம் என சொல்லிட்டு போங்க. சிங்கள மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறவில்லை, உங்கள் அரசு தமிழர்களுக்கு கொடுக்குமா" என கேள்வி எழுப்பினார்.