கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 73 வயது முதியவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு சைக்கிளில் பயணித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். 73 வயதான இவர் கொரோனா முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பதாக சென்னையில் உள்ள தன்னுடைய மகனின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அடுத்த சில நாட்களிலே பொதுமுடக்கம் அமலானதால் அங்கேயே முடங்கினார்.
இ-பாஸ் எடுக்கும் வழிமுறைகள் தெரியாததாலும் ஊருக்கு செல்ல வாகனம் இல்லாததாலும் தன்னுடைய பேரனின் ஹெர்குலஸ் சைக்கிளை எடுத்துக் கொண்டு நெல்லைக்கு கிளம்ப முடிவு செய்தார் பாண்டியன்.
சென்னைக்கும் நாங்குநேரிக்கும் இடைப்பட்ட தூரம் 657 கிலோமீட்டர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி மாலை சென்னையில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய பாண்டியன் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து 29-ஆம் தேதி இரவில் ஊர் திரும்பியுள்ளார். ஊர் செல்லும்வரை சாப்பாட்டுக்கு தேவையான பணம் வைத்திருந்ததாக கூறும் பாண்டியன், பகல் முழுவதும் சைக்கிளில் பயணித்து இரவில் ஏதேனும் கடைவாசல் முன்பாக உறங்கியுள்ளார்.
தெய்வநாயகப்பேரி திரும்பியதும் ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டார். அப்போது கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றையும் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டார்.
தற்போது நான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் தற்போது சென்னையில் உள்ளனர். எனது உற்றார் உறவினர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சிறுவயதிலேயே படித்துக் கொண்டே வயலில் உழைக்கும் பழக்கம் கொண்டவன். அதனால் ஏற்பட்ட உடல் உறுதியால் தற்போது ஐந்து நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிந்தது. இன்னும் சிறிது காலம் உறவினர்களுடன் இருந்து விட்டு பின்னர் சென்னைக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறேன்” என்றார்.
73 வயதில் 650 கிலோமீட்டர் தொலைவுகளை ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்து வந்த முதியவர் பாண்டியனை அப்பகுதியினர் பாராட்டி வருவதுடன் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்