தமிழ்நாடு

“நிறுவனத்தின் நலனுக்காக”- அசோக் லேலண்டில் மீண்டும் வேலை இல்லா நாட்கள்

“நிறுவனத்தின் நலனுக்காக”- அசோக் லேலண்டில் மீண்டும் வேலை இல்லா நாட்கள்

webteam

எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் செப்டம்பர் 6 தேதி முதல் 5 நாட்களுக்கு  வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது. 

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் சென்னை எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. 

இந்நிலையில் வரும் 6ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஊழியர்களுக்கு வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசோக் லேலண்ட், “வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக  நிறுவனத்தின் நலனுக்காக சில முடிவுகளை நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி வரும் 6,7,10,11 ஆகிய தேதிகளில் நிறுவனத்தில் வேலைகள் நடைபெறாது. 9ம் தேதி வேலைநாள் கிடையாது என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இந்த நாட்களில் ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு வரவேண்டாம். இந்த நாட்களில் சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே கடந்த மாதம் 10 நாட்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த மாதம் வாகன விற்பனை 70 சதவிகிதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.